ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினர்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச்( செர்பியா) 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் தட்சுமா இட்டோவை சுலபமாக வீழ்த்தினார். 16 ஏஸ் சர்வீஸ்களை போட்டு மிரட்டிய ஜோகோவிச் அடுத்து மற்றொரு ஜப்பான் வீரர் நிஷியாகாவை எதிர்கொள்கிறார்.

6 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரருக்கும் 2-வது சுற்று சிக்கலின்றி அமைந்தது. அவர் 6-1, 6-4, 6-1 என் நேர் செட்டில் பிலிப் கிராஜினோவிச்சை (செர்பியா) விரட்டினார். 21-வது முறையாக 3-வது சுற்றை அடைந்துள்ள பெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் சுவைத்த 99-வது வெற்றி இதுவாகும். அடுத்து ஜான் மில்மனை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

குரோஷிய வீரர் மரின் சிலிச் தன்னை எதிர்த்து நின்ற பெனோய்ட் பேருடன் ( பிரான்ஸ்) 5 செட் வரை மல்லுகட்ட வேண்டி இருந்தது. 3 மணி 33 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் சிலிச் 6-2, 6-7(6-8), 3-6, 6-1, 7-6 (10-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள மாட்டியோ பெரேட்டினி (இத்தாலி) 100-ம் நிலை வீரர் டெனிஸ் சான்ட்கிரினிடம் (அமெரிக்கா) கடும் சவாலுக்கு மத்தியில் வீழ்ந்தார். 3 மணி 23 நிமிடங்கள் திரிலிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் சான்ட்கிரின் 7-6 (9-7), 6-4, 4-6, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இதே போல் 20-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவும் (பல்கேரியா) அமெரிக்காவின் டாமி பாலுக்கு எதிராக 5 செட் வரை போராடி ஓய்ந்தார். சிட்சிபாஸ் (கிரீஸ்), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), பாபியோ போக்னினி (இத்தாலி) உள்ளிட்டோர் 3-வது சுற்றை எட்டினர்.

ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திவிஜ் ஷரண், நியூசிலாந்தின் ஆர்டெம் சிடாக் கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் காரெனோ பஸ்தா (ஸ்பெயின்) – ஜோ சோசா (போர்ச்சுகல்) இணையை தோற்கடித்தது.

அதே சமயம் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் யாசுடகா உச்சியாமா இணை முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இவர்களை அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையன், மைக் பிரையன் ஜோடியினர் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போலோனா ஹெர்காக்கை (சுலோவேனியா) விரட்டியடித்து தொடர்ந்து 4-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் 3-வது சுற்றை எட்டுவது 1988-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் சீனாவின் சாய்சாய் ஜெங்கை சாய்த்தார். ஒசாகா 3-வது சுற்றில் 15 வயது இளம் புயல் அமெரிக்காவின் கோரி காப்புடன் மோத உள்ளார். முன்னதாக கோரி காப் 2-வது சுற்றில் சோரனா கிர்ஸ்டியாவை (ருமேனியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் 3-வது சுற்றில் இதே ஒசாகாவிடம் தான் கோரி காப் தோற்று இருந்தார். அதற்கு இந்த முறை பழிதீர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொடருடன் டென்னிசுக்கு முழுக்கு போடும் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி( டென்மார்க்) 2-வது சுற்றில் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் டயானா யாஸ்ட்ரிம்ஸ்காவை (உக்ரைன்) வென்றார்.

24-வது கிராண்ட்ஸ்லாம் மகுடத்துக்கு குறி வைத்துள்ள முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் தமரா ஜிடான்செக்கை (சுலோவேனியா) ஊதித்தள்ளினார். செரீனா 3-வது சுற்றில் சீனாவின் குயாங் வாங்குடன் மோதுகிறார். பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )