ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். முன்னாள் சாம்பியன் ஷரபோவா, தமிழக வீரர் குணேஸ்வரன் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்றும் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-2, 6-3, 6-0 என்ற நேர் செட்டில் ஹூகோ டெலியனை (பொலிவியா) பந்தாடினார். நடால் 2-வது சுற்றில் பெடரிகோ டெல்போனிசை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-3, 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாபோவை (அமெரிக்கா) விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

12-ம் நிலை வீரர் இத்தாலியின் பாபியோ போக்னினி முதல் சுற்றை தாண்டுவதற்கு ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. ரீலி ஒபல்காவை (அமெரிக்கா) எதிர்த்து களம் புகுந்த போக்னினி முதல் இரண்டு செட்டுகளை பறிகொடுத்து, அதன் பிறகு மீண்டெழுந்து கடைசி 3 செட்களை வசப்படுத்தி தப்பினார். 3 மணி 38 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் போக்னினி 3-6, 6-7 (3), 6-4, 6-3, 7-6 (10-5) செட் கணக்கில் ஒபல்காவை வீழ்த்தினார். ஒபல்கா 35 ஏஸ் சர்வீஸ் வீசியும் பலன் இல்லை.

டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிக் கைர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), டியாகோ ஸ்சிவாட்ஸ்மன் (அர்ஜென்டினா), மரின் சிலிச் (குரோஷியா), கச்சனோவ் (ரஷியா) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

ஒற்றையர் பிரிவில் களம் இறங்கிய ஒரே இந்தியரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனின் கனவு ஆரம்ப நிலையிலேயே தகர்ந்து போனது. முதல் சுற்றில் ஜப்பான் வீரர் தட்சுமா இட்டோவை எதிர்த்து ஆடிய குணேஸ்வரன் 4-6, 2-6, 5-7 என்ற நேர் செட்டில் தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் நடந்தது. இதில் வெற்றி பெற்றிருந்தால் குணேஸ்வரன், 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை சந்திக்கும் அரிய வாய்ப்பை பெற்றிருப்பார்.

குணேஸ்வரன் கூறுகையில், ‘இட்டோ ஒன்றும் தோற்கடிக்க முடியாத வீரர் அல்ல. போட்டி அட்டவணை எனக்கு நன்றாகவே அமைந்திருந்தது. தகுதி சுற்றில் நான் மூன்று ஆட்டங்களில் விளையாடி சிறப்பாக தயாராகி இருந்தேன். ஆனால் பதற்றமாக விளையாடி கோட்டை விட்டு விட்டேன்’ என்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் ஜெனிபர் பிராட்டியை (அமெரிக்கா) தோற்கடித்தார்.

2-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-1, 7-5 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பென்சிச் (சுவிட்சர்லாந்து) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

அதே சமயம் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், 2008-ம் ஆண்டு சாம்பியனுமான ரஷியாவின் மரிய ஷரபோவா 3-6, 4-6 என்ற நேர் செட்டில் டோனா வெகிச்சிடம் (குரோஷியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 5 டபுள் பால்டுடன் பந்தை லைனுக்கு வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளிகளை தாரைவார்க்கும் தவறுகளை 31 முறை செய்தது ஷரபோவாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

2017-ம் ஆண்டு ஊக்கமருந்து சர்ச்சை மற்றும் அடிக்கடி காயத்தில் சிக்கியதால் தனது வலுமிக்க ஆட்டத்திறனை இழந்து விட்ட ஷரபோவா தரவரிசையிலும் டாப்-100-ஐ விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார். ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் இந்த ஆஸ்திரேலிய ஓபனில் அடியெடுத்து வைத்த 32 வயதான ஷரபோவா இந்த முறையும் ஜொலிக்கவில்லை. தொடர்ந்து 3 கிராண்ட்ஸ்லாமில் முதல் சுற்றிலேயே நடையை கட்டியுள்ளார். இதே போல் 13-ம் நிலை வீராங்கனை ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 4-6, 2-6 என்ற நேர் செட்டில் ஆன்ஸ் ஜாபெரிடம் (துனிசியா) ‘சரண்’ அடைந்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )