வாக்கு எண்ணிக்கை மையங்களை கண்காணிக்க வேண்டும் :அதிமுக கட்சி தலைமை வேண்டுகோள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதிமுக முகவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் நேற்றைய தினம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமை சார்பில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை மிகுந்த கவனத்துடன் இரவு, பகலாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சியின் தொண்டர்களிடம் மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.