வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்…!

தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
சென்னை,

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்கள் விவரங்களை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1.1.2022-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்படி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட சிறப்பு சுருக்க காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 36 ஆயிரத்து 917 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 456 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 759 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரத்து 250 பேரும், 3-ம் பாலினத்தவர் 7,804 பேர் உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 7 லட்சத்து 11 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3,56,239, பெண்கள் 3,55,394, 3-ம் பாலினத்தவர் 122 பேர் உள்ளனர்.

குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ் வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் மொத்த வாக்காளர்கள் 1,78,517 பேர் உள்ளனர். ஆண்கள் 86,893, பெண்கள் 91,613, 3-ம் பாலினத்தவர் 11 பேர் உள்ளனர்.

இதற்கு அடுத்ததாக 2-ம் இடத்தில் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட துறைமுகம் தொகுதி உள்ளது. இதுவரையில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 888 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

18-19 வயதுள்ள 4 லட்சத்து 32 ஆயிரத்து 600 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல்களை தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்தில் காணலாம். அதில் தங்கள் பெயரை சரி பார்த்துக்கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.1.2022 அன்று 18 வயது நிரம்பிய தகுதி உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் இந்த மையங்களை தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.

தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-42521950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் மாநில தொடர்பு மையம் இயங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.