பாதியில் நிற்கும் வீட்டுவசதி திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவி யாருக்கு பொருந்தும்?

பாதியில் நிற்கும் வீட்டுவசதி திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவி யாருக்கு பொருந்தும்?

புதுடெல்லி

இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு வீட்டுவசதி திட்டங்கள் முழுவதும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்பணிகளை நிறைவேற்றி முடிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.25,000 கோடியை மாற்று முதலீட்டு நிதியாக (ஏஐஎஃப் ) ஒதுக்கி உள்ளது. இதற்கான ஒப்புதலை புதன்கிழமை அன்று மத்திய அமைச்சரவை வழங்கியது. இந்நிலையில் இச்சலுகை யாருக்குப் பொருந்தும், பொருந்தாது என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் பெரும்பாலான திட்டங்களுக்கு இச்சலுகைப் பொருந்தும். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள திட்டங்களுக்கு இச்சலுகைப் பொருந்தாது. மேலும் இச்சலுகைப் பொருந்தக்கூடிய திட்டங்களில் வீட்டுக்கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள், தாங்கள் கடன் வாங்கிய வங்கியையோ, நிதி நிறுவனத்தையோ தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாராக் கடன் மற்றும்திவால் நடவடிக்கையை எதிர்கொண்டு வரும் வீட்டு வசதி திட்டங்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. பாதியில் நிற்கும் சுமார் 1,600 வீட்டு வசதி திட்டங்களை மீண்டும் தொடரும் வகையில் ரூ.25,000 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவித்தார். இதில் ரூ.10,000 கோடியை மத்திய அரசும் மீதமுள்ள ரூ.15,000 கோடியை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் (எல்ஐசி), பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) வழங்கும் என்று தெரிவித்தார்.

தனி இணைய தளம்அந்த வீட்டு வசதி திட்டங்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் காரணமாக சுமார் 4.58 லட்சம் வீட்டுகட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு திட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ.400 கோடி அளவிலேயே நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள தனி இணையதளம் ஒன்று நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் மொத்தமாக ரூ.1.8டிரில்லியன் மதிப்பிலான வீட்டுவசதிதிட்டங்கள் நிலுவையில் இருப்பதாக நில ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. விளைவாக, அது தொடர்பான அனைத்து தொழில்களும் சரிவைச் சந்தித்தன.

இந்நிலையில் அவற்றை மீட்டு எடுப்பதன் வழியே பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இரும்பு, சிமென்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் தேவை அதிகரித்து அவற்றின் உற்பத்தி உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அவற்றில் சில மாற்றங்களை மேற்கொண்டு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )