டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்

ஏடிஎம்களில் இருந்து டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் மிச்சமாகின்றனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.

இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கும் பொருட்டு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை பல்வேறு வங்கிகளும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஐசிஐசிஐ வங்கியும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் ஐமொபைல் ஆப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎமில் இருந்து பணம் எடுக்க முடியும்.

தினந்தோறும் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் மட்டுமே இந்த முறையில் பணம் எடுக்க முடியும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )