முல்லைப் பெரியாறு அணை: 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

138 அடியை எட்டிய பெரியாறு அணை நீர்மட்டம்: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

இடுக்கி மாவட்டத்துக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 137 அடியை தொட்டவுடன் இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை அணையின் நீர் மட்டம் 138.05 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 3522 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6635 மி.கன அடியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும்போது 13 மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும். இந்த நீர் இடுக்கி அணையை சென்றடையும். அதற்கேற்ற வகையில் நீரின் இருப்பையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாகவும் வைகை அணை நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 60.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2136 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 769 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 3705 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 376 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.44 அடி. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 59 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெரியாறு 28.4, தேக்கடி 40, கூடலூர் 9.4, சண்முகாநதி அணை 14.8, உத்தமபாளையம் 3, வீரபாண்டி 12, சோத்துப்பாறை 5, கொடைக்கானல் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.