முதலாவது தானியங்கி வாகனத்தை இயக்கும் பெய்ஜிங்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சீனா சிறந்த முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது.
கடைக்கோடி கிராமங்களில் இணைய வணிகம் முதல் விண்வெளியில் தனக்கென சொந்தமாக
விண்வெளி நிலையம் கட்டியமைப்பது வரையில் சீனாவின் தொழில்நுட்பச் சாதனைகள்
விரிவாகிக் கொண்டே செல்கிறது. தவிரவும், செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு என பல புதிய
தொழில்நுட்பங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இச்சாதனைகளின் பட்டியலில்
தற்போது பெய்ஜிங்கில் தானியங்கி வாகனம் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் பெய்ஜிங்கில் முதன்முறையாக வணிக ரீதியிலான தானியங்கி வாகனத்தின் சோதனை
ஓட்டம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே, ஷாங்காய், ஷென்ஜென் போன்ற மாநகரங்களில்
இத்தகைய வாகனங்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில்
தற்போது பெய்ஜிங்கும் தானியங்கி வாகனத்தைப் பெற்றுள்ளது.

இது குறித்து உயர்நிலை தானியங்கி வாகன சோதனையோட்ட மண்டல அலுவலகத்தின்
தலைவர் கொங் லெய் கூறுகையில், இவ்வாண்டு ஏப்ரல் முதல் தற்போது வரையில்
இத்தானியங்கி வாகனத்தின் ஒட்டுமொத்த சோதனை ஓட்டம் மொத்தம் 30 லட்சம் கிலோ
மீட்டரை எட்டியுள்ளது. மேலாண்மை நிர்வாகத்தின் புத்தாக்கக் கொள்கையானது நல்ல
முடிவுகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

சீனாவின் தொழில்நுட்ப பெருநிறுவனமான பைடு மற்றும் போனி.அய் ஆகிய நிறுவனங்கள்,
தானியங்கி வாகன சேவைகளை அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது
நிறுவனங்களாகும். பெய்ஜிங்கின் பொருளாதார வளர்ச்சி மண்டலம் மொத்தம் 60 சதுர
கிலோமீட்டர் பரப்பளவிலானது. அம்மண்டலத்தில் இந்நிறுவங்கள் சுமார் 100 தானியங்கி
வாகனங்களை சேவையில் அமர்த்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் கொள்கைகளின்படி, நிறுவனங்கள் சேவையை வழங்குவதற்குமுன் தரநிலைகள் மற்றும்
கட்டண முறைகளை பயணிகளுக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று
உத்தரவிடப்பட்டுள்ளது. இது, சேவைக் கட்டணம் தொடர்பாக பொது மக்களிடையே எழும்
தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க உதவும். உயர்நிலைத் தானியங்கி செயல்விளக்க மண்டலம்,
பொதுமக்களின் பயணச் சேவையை மேம்படுத்தும் வகையில் சோதனைப் பகுதிகளை உரிய
நேரத்தில் விரிவுபடுத்தும் என்றும் கொங் லெய் தெரிவித்தார்.

சீனாவின் ஷாங்காய், ஷென்ஜென், பெய்ஜிங் போன்ற பெருநகரங்கள் ஏற்கெனவே பல
முன்னேறிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளன. இதனால், மக்களின் வாழ்க்கை வெகு
சுலபமாக மாறியுள்ளது. இந்நிலையில், தானியங்கி வாகனங்களும் மக்களின் அன்றாட
வாழ்க்கையில் ஒன்றாக மாறும் பட்சத்தில் அது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடையே
பெரும் வரவேற்பைப் பெறும்.
பாண்டுரங்கன், பெய்ஜிங்.