மம்தா பானர்ஜி ஏழை மக்களுக்கு எதிரானவர் :ஸ்மிருதி இரானி

மம்தா பானர்ஜி மேற்குவங்காளத்தில் உள்ள ஏழை மக்களுக்கு எதிரானவர் என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் இன்று பேசிய மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, வாக்குச்சாவடிகளுக்கு மையங்களுக்கு செல்லும் பொதுமக்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) இடையூறு செய்யக்கூடாது. உண்மையான சிஆர்பிஎஃப் வீரர்களை நான் மதிக்கிறேன். ஆனால், தொல்லைகொடுக்கும், பெண்களை தாக்கும், மக்களை துன்புறுத்தும் பாஜக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை நான் மதிப்பதில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மத்திய மந்திரியும், பாஜக தலைவரில் ஒருவருமான ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிருதி இராணி கூறுகையில், மம்தா பானர்ஜியின் ரவுடித்தனம் மற்றொரு திருப்பத்தை சந்தித்துள்ளது. ஆனால், மேற்குவங்காள மக்கள் அதை தடுத்து நிறுத்த முடிவு செய்துவிட்டனர். மம்தா தனது தோல்வியை இந்த தேர்தலில் சந்திப்பார். அவர் மேற்குவங்காளத்தில் உள்ள ஏழைகளுக்கு எதிராக உள்ளார். தற்போது அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேசியுள்ள்ளார்’ என்றார்.