புதிய உச்சம் தொடும் பெரிய வெங்காயத்தின் விலை

மீண்டும் புதிய உச்சம் தொடும் பெரிய வெங்காயத்தின் விலை

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெங்காயம் விலை உயர்வு பெரும் வியாபாரிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அன்றாட சமையலுக்கு உகந்த வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சம் தொடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை வெங்காயம் விலை இது போன்று உயர்ந்து வருவது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கனமழை கொட்டி வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த பெரிய வெங்காயம் வேளாண் நிலத்திலேயே அழுகி வருகிறது. இதனால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தின் பெரிய வெங்காயத்தின் தேவையினை மேற்கண்ட 3 மாநிலங்களே அதிகம் பூர்த்தி செய்கின்றன. தற்போது கர்நாடகாவில் வெங்காயம் அறுவடை செய்கின்றனர். ஆனால் அங்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பயிர்கள் அழுகி வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக தற்போது பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. திருச்சி மொத்த வெங்காய மண்டியில் கடந்த 10 நாட்களில் இருமுறை வெங்காயம் விலை உயர்ந்திருக்கிறது. நேற்றைய தினம் ரூ.40-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இன்று (செவ்வாய்க்கிழமை) ரூ.44 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் அதன் விலை ரூ.60-ஐ நெருங்கியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் கால கட்டங்களில் தமிழகத்தில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து எகிப்து, துருக்கி நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மார்க்கெட்டுகளுக்கு சப்ளை செய்யப்பட்டது. ஆனால் நமது நாட்டு வெங்காயத்தை போன்று ருசி இல்லை என இல்லத்தரசிகள் வாங்க மறுத்தனர்.

இதனால் வியாபாரிகள் வெளிநாட்டு வெங்காயத்தை விற்பனை செய்ய கடும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது. அதுபோன்ற நிலை மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த விலையேற்றம் தொடர்பாக திருச்சி மொத்த வெங்காயம் விற்பனையாளர் சங்க செயலாளர் தங்கராஜ் கூறும்போது, மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு நாங்கள் வெங்காயம் சப்ளை செய்கிறோம். ஒரு நாளைக்கு திருச்சிக்கு 300 மெட்ரிக் டன் வெங்காயம் வருகிறது.

இதில் பெரும்பான்மை தேவையை கர்நாடகம் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் அறுவடை சீசனில் அங்கு கனமழை பெய்வதால் அங்கிருந்து வரும் புதிய வெங்காயம் தரமாக இல்லை. இந்த வெங்காயத்தை உடனே விற்று தீர்த்துவிட வேண்டும். இல்லையெனில் அழுகும் அபாயம் உள்ளது.

ஆகவே வியாபாரிகள் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பழைய வெங்காயத்தை வரவழைக்கின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்க தொடங்கியுள்ளனர்.

இதுவே விலையேற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் தேவையான இருப்பு இருக்கும் என கருதுகிறோம். ஆகவே கடந்த ஆண்டை போல வெங்காயம் விலை உயருவதற்கான வாய்ப்பு இல்லை என்றார். இருந்தபோதிலும் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெங்காயம் விலை உயர்வு பெரும் வியாபாரிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.