நிலக்கரி தட்டுப்பாடு விவகாரம்; மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை

புதுடெல்லி,அக்டோபர்.11

பெருகி வரும் மின்சார தேவையை சமாளிக்கிற விதத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 28 வரையில், அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்திய நிலக்கரி நிறுவனம் 24 கோடியே 30 லட்சம் டன் நிலக்கரியை வினியோகித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகம் என தகவல்கள் கூறுகின்றன.இந்த நிலையில்தான் தற்போது நிலக்கரி பற்றாக்குறை என தகவல்கள் வெளியாகின.

மின் உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரிக்கான தேவை பெருகி இருக்கிறது. அதிகப்படியான தேவையை சமாளிக்க இறக்குமதியை நாட முடியாத நிலையில் நாடு உள்ளது. காரணம், சீனாவிலும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதை உற்பத்தி செய்கிற வெளிநாடுகளில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் உள்நாட்டு உற்பத்தியைத்தான் நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில்தான், டெல்லி, பஞ்சாப் என பல மாநிலங்களிலும் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவயைான நிலக்கரி கையிருப்பு கரைந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையொட்டி, மத்திய நிலக்கரி அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மின் துறை அமைச்சர் ஆர்.கே சிங் ஆகியோர் பங்கேற்றனர். மின் துறை அதிகாரிகளும் இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.