நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை :ஹர்ஷ் வர்தன்

நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார்.
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 630- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து 01 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 135 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 43 ஆயிரத்து 473- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 177- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474- ஆக உயர்ந்துள்ளது.

தங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவற்றை அனுப்பும்படி மராட்டிய , ஆந்திர மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளன.மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்து இருந்தார்.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், டெல்லியில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன் இந்த 2 மாநிலங்களுக்கும் அவற்றின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளித்தார்.

எந்த மாநிலத்திலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என்ற அவர், அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப அவை அனுப்பி வைக்கப்படுவதாக கூறினார். நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போதே மாநிலங்களிடம் இந்த தகவல் பகிரப்பட்டதாவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.