நல்வரவேற்பைப் பெற்றுள்ள சீன-லாவோஸ் இருப்புப் பாதை

இருப்புப் பாதை வளர்ச்சியில், குறிப்பாக, உயர்வேக இருப்புப் பாதையில்
உலக அளவில் சீனா முதல் இடத்தில் உள்ளது. இருப்புப் பாதைக்
கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, இருப்பூர்தி பெட்டிகள் தயாரிப்பு, உயர்வேக
இருப்பூர்தி வடிவமைப்பு என இத்துறையில் உயர் தொழில்நுட்பம் சார்ந்த பல
முன்னேற்றங்களைச் சீனா கொண்டுள்ளது. இத்தகைய தயாரிப்புகள் இந்தியா
உள்ளிட்ட பல நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்தும் வருகிறது. தவிரவும்,
வளர்ந்து வரும் ஆப்பிரிக்க மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இருப்புப் பாதைக்
கட்டுமான வளர்ச்சிக்கு சீனா இயன்ற உதவிகளையும் அளித்து வருகிறது.
அதனை எடுத்துக் காட்டும் விதம் சீனா-லாவோஸ் இருப்புப்பாதை
அமைந்துள்ளது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியையும் லாவோஸையும் இணைக்கும்
உயர்வேக இருப்புப் பாதை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவின்
குன்மிங் முதல் லாவோஸின் தலைநகரான வியண்டினா வரையிலான இந்த
உயர்வேக இருப்புப் பாதையின் மொத்த நீளம் 1024 கிலோ மீட்டர். இதில்,
மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் இருப்பூர்திகள் செல்ல
முடியும். 870 கோடி டாலர் மதிப்பில் இந்த இருப்புப் பாதை
கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் நெடுகில் மொத்தம் 93 சுரங்கப் பாதைகள்
மற்றும் 136 பாலங்கள். சுரங்கப் பாதைகளின் நீளம் 398 கிலோமீட்டர்,
பாலங்களின் நீளம் 50 கிலோ மீட்டருக்கும் அதிகம். 10 கிலோ மீட்டர் நீளம்
கொண்ட சுரங்கப் பாதைகளின் எண்ணிக்கை 15.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் ஊடகத் துறையைச் சேர்ந்த
சுமார் 200 பேர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் என பலர்
பங்கேற்றனர். பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜருவான் உடோம்சப்
கூறுகையில், இருப்பூர்தியின் உள்அலங்காரம் மிகவும் அழகாக உள்ளது.
யுன்னான் மாநிலத்தின் கிராமியக் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதம்
அமைந்துள்ளது. சீன ரயில்வே கட்டுமான வாரியம் உலகத் தரம் வாய்ந்தது.
அதன் வடிவமைப்பு மற்றும் இருப்பூர்தியின் வேகம் மிகவும் அருமை என்று
பாராட்டு தெரிவித்தார்.
“இந்த இருப்புப் பாதையானது உலகத்தரத்திலானது. நாட்டை உலகுடன்
இணைக்கிறது,” என்று இருப்பூர்தி சிப்பந்தி லி பெய் தெரிவித்தார். இரு
நாட்டுப் பயணிகள் சென்று வருவது எளிமையாகியுள்ளதுடன், இரு
நாடுகளுக்கும் இடையேயான வணிகம் மற்றும் காலாசாரப் பரிமாற்றத்துக்கும்
இது மிகவும் உறுதுணையாக இருக்கும். லாவோஸின் பொருளாதார
வளர்ச்சிக்கு இவ்விருப்புப் பாதை சேவை கணிசமான பங்காற்றிடும். அது,
உள்ளூர் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும்,
சீனாவின் மாநிலத்துடனான ஆசியான் நாடுகளின் பரிமாற்றம் மற்றும்
ஒத்துழைப்பு வலுவடையும். இச்சேவையைத் தொடர்ந்து, பிற
தென்கிழக்காசிய நாடுகளுடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பும்
வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிரவும், இந்த இருப்புப் பாதைச்
சேவையை தாய்லாந்து மற்றும் அதற்கு தெற்குவரை நீட்டிக்கும் திட்டமும்
உள்ளது வரவேற்கத்தக்கது.
-பாண்டுரங்கன், பெய்ஜிங்.