நரேந்திர மோடி ஜனநாயகம் மிக்க தலைவர்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

புதுடெல்லி,அக்டோபர்.10

தனக்கு தெரிந்த வரையில் மிகவும் ஜனநாயகம் மிக்க தலைவர்களில் ஒருவர் பிரதமர் மோடிதான் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது அமித்ஷா இந்தத் தகவலை தெரிவித்தார். பேட்டியின் போது பிரதமர் மோடி சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அமித்ஷா தனது பேட்டியின் போது கூறியதாவது;- எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதும் மோடியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை போன்ற அனைத்தையும் கேட்கும் நபர் ஒருவரை நான் பார்த்தது இல்லை. எந்த பிரச்சினை குறித்த கூட்டமாக இருந்தாலும் சரி அனைவர் கூறுவதையும் பொறுமையாக கேட்பார். ஒவ்வொரு நபரின் கருத்தின் மதிப்பை அவர் பரிசீலிப்பார். அதன் பிறகே முடிவு எடுப்பார். எனவே, அவர் சர்வாதிகாரத்துடன் செயல்படுவார் என்ற விமர்சனத்தில் உண்மையில்லை.

ஜனநாயக முறைப்படியே மோடி தனது அமைச்சரவையை நடத்துகிறார். கேபினட் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை நான் பொது வெளியில் பகிர முடியாது. ஆகவே, அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார் என்பது தவறான பார்வை ஆகும். எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்வார்.

அதில் உள்ள நிறை குறைகளை கேட்டறிவார். பிரதமர் என்பதால் இறுதி முடிவு அவர் வசம் இருக்கும். வேறுபட்ட அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்கள் உண்மைகளை திரித்து பிரதமருக்கு எதிராக களங்கம் ஏற்படுத்துவது துரதிருஷ்டவசமானது” என்றார்.