சிறிய மின்சார காரை அறிமுகம் செய்த Citroen..!

சிறிய மின்சார காரை அறிமுகம் செய்த Citroen..!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் (Citroen), மிக சிறிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல், கார்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை களமிறக்குவதில் உலக நாடுகள் பலவும் முனைப்பு காட்டி வருகின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக உருவாகும் நச்சுக்களால் காற்று மாசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் தொகை மற்றும் அதிக வாகன இயக்கங்களை கொண்ட நாடுகள் பலவும் (இந்தியா உட்பட) மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில் நகரத்தில் வசிக்கும் இளம் தலைமுறையினரை கவருவதை இலக்காக கொண்டு, மினி எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது சிட்ரோன். AMI என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய ரக எலக்ட்ரிக் கார் ஜூன் 2020-க்குள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைவருடன் சேர்த்து ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் மட்டுமே இந்த மின்சார காரில் பயணிக்க முடியும்.

இதன் விலை 7500 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.5 லட்சமாக இருக்கும் என்று வாகன உற்பத்தியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Citroen AMI மின்சார காரை ஒரு முறை முழு சார்ஜ் செய்வதன் மூலம் 70 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது electric powertrain உடன் வரவிருக்கும் கார்களில் ஒன்றாகும். இந்த சிறிய மின்சார காரின் நீளம் 2,041 மிமீ. இந்த மின்சார கார் 5.5 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 220V சாக்கெட் மூலம் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் மட்டுமே ஆகும் என உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் onboard charging cable மூலம் தங்களது Citroen AMI மின்சார காரை வாசற்படியில் வைத்து கூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். முக்கியமாக Citroen தனது சிறிய ரக AMI மின்சார கார்களை ஆன்லைனில் விற்க திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள சாலை விதிகளின் படி, 2 இருக்கைகள் கொண்ட கார்களை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்க முடியும்.

நகரவாசிகளைக் கருத்தில் கொண்டு AMI மின்சார கார் மிக சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் குறுகிய சாலைகளில் எளிதாக இயக்கவும், எளிதாக பார்க்கிங் செய்வது உள்ளிட்ட பலவற்றை கவனத்தில் கொண்டும் AMI மின்சார கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரின் டாப் ஸ்பீட் மணிக்கு 45 கி.மீ. மார்ச் 30-ஆம் தேதி பிரான்சில் இந்த மின்சார காருக்கான புக்கிங் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனியில் புக்கிங் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுளது.விரைவில் இந்தியாவில் கால்பதிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது Citroen நிறுவனம். எனவே இந்தியாவில் இந்த மின்சார கார் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )