ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,

துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது ராமர், சீதையின் உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டதாகவும்.. சோ வின் துக்ளக் பத்திரிகையைத் தவிர வேறு எந்த பத்திரிகையும் இதை வெளியிடவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ரஜினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேள்விபட்டதையும் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததையே தான் பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஒரு நடிகர் என்றும் அவர் அரசியல்வாதி இல்லை என்று கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பெரியார் குறித்து பேசும் போது ரஜினிகாந்த் யோசித்து கருத்து கூற வேண்டும் என்று கூறினார்.

துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியார் குறித்து பேசுபவர்கள், அவரது கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டுமென கூறி உள்ளார்.

இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும்? ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் எதற்கு பேச வேண்டும். இது மலிவான அரசியல்.

தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும். 1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார். எத்தனை ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )