ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அதன்படி, மார்ச் 6-ந் தேதியன்று தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 13-ந் தேதி ஆகும்.

மார்ச் 16-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான கடைசி நாள் 18-ந் தேதியாகும். வாக்குப்பதிவு மார்ச் 26-ந் தேதி நடைபெறும்.

வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நடந்த 26-ந் தேதியன்றே மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் 30-ந் தேதியன்று முடிவடையும்.

இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளரை (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், கூடுதல் செயலாளரை (பா.சுப்பிரமணியம்) உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.

இதற்கிடையில் பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு, மாநிலங்களவை எம்பி சீட் கொடுக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள தங்கள் கட்சிக்கும் ஒரு சீட்டு பெற்று விட வேண்டும் என்று தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்கு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்.பி. பதவி கொடுப்பதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்தது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும். இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து கூட்டணி அமைத்து கொண்டு தேர்தலை சந்தித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியை அசைக்க முடியாது. ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும், அதிமுகவுக்கு கவலை இல்லை.

ரசாயனம் கலந்த மீன்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )