‘ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு நாங்கள் பதில் கூறுவோம் : உதயநிதி ஸ்டாலின்

‘ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு நாங்கள் பதில் கூறுவோம் : உதயநிதி ஸ்டாலின்

பெரியார் விவகாரத்தில் ரஜினிகாந்த் நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி, பெரியார் பற்றி குறிப்பிட்டுப் பேசிய நிகழ்வு சர்ச்சையானது.

இந்நிலையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் பெரியார் குறித்துப் பேசியது சரிதான். அதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்காகப் போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது யோசித்துச் சிந்தித்துப் பேச வேண்டும்” என்று கூறினார்.

இதனையடுத்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அவசரச் செயற்குழு கூட்டத்திற்குப் பின்பு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பெரியார் பற்றி நான் கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ரஜினி கூறி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த உதயநிதி, ”ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு நாங்கள் பதில் கூறுவோம். காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்த பின்பு அவர் மன்னிப்பு கோரியது போல, பெரியார் விவகாரத்திலும் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்.

துக்ளக் விழாவில் அவர் தெரியாமல் பேசிவிட்டார். நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்” என்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )