தி.மு.க. சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு :மு.க.ஸ்டாலின்

தி.மு.க. சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு :மு.க.ஸ்டாலின்

25 நகரங்களில் சமையல் கூடங்களை உருவாக்கி தி.மு.க. சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘முகநூல்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

உணவுக்கே வழியில்லாத, வீடுகள் இல்லாத, வாழ்விடம் இல்லாத மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள், தினசரி வருமானம் ஈட்டுபவர்கள், வீடற்றவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிகமான துயரத்தில் இருக்கிறார்கள்.

நான் முன்பு அறிவித்த ‘ஹெல்ப்லைன்’ எண்ணுக்கு வந்த அழைப்புகள் மூலம் எனக்கு வந்த செய்திகளில் என்னுடைய இதயத்தை நொறுக்கிய செய்திகள் எதுவென்றால், இவர்கள் பேசியது தான். ‘எங்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் சமைப்பதற்கு எங்களுக்கு இடம் கிடையாது’ என்று அவர்கள் சொன்னார்கள்.

‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடியிருப்பார். தனியொரு மனிதனும் பசியால் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ‘ஏழைகளுக்கு உணவளிப்போம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

ஏழைகளுக்கு உணவு அளிப்போம் என்ற திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவு அளிக்கிறோம். பட்டினி இல்லா சூழ்நிலையை ஓரளவுக்கு உருவாக்குவோம். இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையல் கூடங்களை உருவாக்கி, உணவுகள் வழங்கப் போகிறோம். ஒன்றிணைவோம்! உணவளிப்போம்! உதவிகள் செய்வோம்!.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )