தமிழகத்தில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக உயர்வு

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியம் குறையவில்லை. சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக உயர்வு.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சென்னையில் கடந்த 7 நாட்களில் முதன்மை கொரோனா தொற்றால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் சென்னையில் 2 வயது பெண் குழந்தை உட்பட 8 குழந்தைகள் என 94 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 104 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது தமிழக மருத்துவமனையில் 922 பேர் மட்டும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தமிழக மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து 1,210 பேர் இதுவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட, சென்னையை சேர்ந்த 65 ஆண் மற்றும் 27 வயது பெண் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 33 பேர் ஆகும்.

கொரோனா வைரசால் நேற்று பாதிக்கப்பட்ட 104 பேரில், சென்னையில் 2 வயது பெண் குழந்தை உட்பட 8 குழந்தைகள் மற்றும் 86 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், காஞ்சீபுரத்தில் 3 பேரும், விழுப்புரத்தில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 25 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகவும், 11 மாவட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும், ஒரு மாவட்டத்தில் பாதிப்பு எதுவும் இல்லாததால் பச்சை மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )