தன்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி: பிரதமர் மோடி

தன்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகர்தலா,

பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால்,போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறும் போது, “ பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய குளறுபடியை கவனத்தில் எடுத்துள்ளோம். இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும். மாற்று பயண திட்டமாக சாலை வழியாக செல்ல நேரும் போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், பஞ்சாப் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குறைபாடு காரணமாக பதிண்டா விமான நிலையத்திற்கே கன்வாய் மீண்டும் செல்ல முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விளக்கம் கேட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தன்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

“விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பி இருக்கிறேன். அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள்” பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.