போயி வேற வேலை இருந்தா பாருங்கடா : நடிகர் விஜய் சேதுபதி டுவிட்

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா : நடிகர் விஜய் சேதுபதி டுவிட்

மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்த நிலையில் போயி வேற வேலை இருந்தா பாருங்கடா என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை,

விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி
வில்லனாக நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த வாரம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் உள்ளிட்ட 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறையினர் அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன. அதன்படி விஜய்க்கு நெருக்கமான கல்லூரி நிர்வாகத்தின் பெண் உரிமையாளர் ஒருவர் இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார் எனவும் இதில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது எனவும் செய்திகள் வெளியாகின.

மேலும், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட சில பிரபலங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும் தகவல் பரவியது. இந்த மதமாற்ற புகாரினால் தான் விஜய் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், இதுகுறித்து செய்திகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி, “போயி வேற வெலை இருந்தா பாருங்கடா” எனத் தெரிவித்துள்ளார். அவரது கருத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )