ஒரு நாளும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததே இல்லை : ஜாக்கிசான்

ஒரு நாளும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததே இல்லை : ஜாக்கிசான்

65 வயதில் அசால்டாக சிக்ஸர் அடிக்கிறார் ஜாக்கிசான். இந்த மனிதரின் எலும்புகள் ரப்பரில் செய்யப்பட்டிருப்பவையோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு என்னென்னவோ வித்தைகள் செய்து உலக ரசிகர்களை எல்லாம் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஜாக்கியின் அடுத்தப் படம் ‘விஷ் டிராகன்’.
பதிவு: டிசம்பர் 14, 2019 09:00 AM
‘விஷ் டிராகன்’ படத்தின் படப்பிடிப்பு எங்கு எல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் செல்லும் மக்கள் ஜாக்கியின் சாகசங்களை வியந்து, ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த இண்டர்நேஷனல் அல்டிமேட் ஸ்டார், இந்த வயதிலும் தன் உடம்பை பிட்டாக வைத்துக்கொள்ள என்னென்ன விஷயங்களைப் பின்பற்றுகிறார்? என்பதை பற்றிய ஒரு குட்டி டைம் லைன் இது….

* தேர்வில் பெயில் ஆனதால் பெற்றோர்களால் தற்காப்புக் கலைப் பள்ளியில் ஜாக்கி சேர்க்கப்பட்டபோது அவருக்கு வயது எட்டு. அப்போதில் இருந்தே அவரது மொத்த இலக்கும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது எப்படி? தேவையற்ற கொழுப்பைக் கரைப்பது எப்படி? என்பதிலேயே இருந்திருக்கிறது. குங்பூ பயிற்சியைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் உடற் பயிற்சி செய்வாராம். அவர் அப்போது செய்த தீவிர பயிற்சிதான் இன்றுவரை அவரை பிட்டாக வைத்திருக்கிறது.

* சிறுவயதில் ஜாக்கி மிகவும் கறாரான உணவுக்கட்டுப்பாடு உடையவர். இப்போது அதை சற்றே தளர்த்தி தனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீமை ஒரு கை பார்க்கிறார். எப்போதும் கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம் இந்த மூன்றையும் உணவில் மிகவும் குறைவான அளவே எடுத்துக் கொள்வார். அதேசமயம் தசைகள் இறுகுவதற்கு புரோட்டீன் மிகவும் அவசியம் என்பதால் நிறைய புரோட்டீன் உள்ள உணவைத்தான் விரும்பி சாப்பிடுவார்.

* இளம்வயதில் தம்ப் பிரஷர் அப், ஸ்பிளிட்ஸ், பேக் பெண்ட்ஸ், டீப் நீ ஸ்குவாட்ஸ், ஆக்ரோபாட்டிக் லீப்ஸ் போன்ற கடும் உடற்பயிற்சிகள் பயின்ற ஜாக்கி, இருபது வயதைக் கடந்தவுடன், தினமும் ஐந்து கி.மீ. ஜாக்கிங், கார்டியோ, சிட் அப்ஸ், புஷ் அப்ஸ் என மேற்கத்திய உடற்பயிற்சிகளை பின்பற்றத் தொடங்கினார்.

* தனது 17 வயதில் இருந்து திரைப்படங்களில் முழு நேரமாக நடிக்கத்தொடங்கிய ஜாக்கி, புரூஸ்லீயின் என்டர்-த-டிராகன், பிஸ்ட் ஆப் யூரியில் ஸ்டன்ட் மேனாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பல விபத்துகள், காயங்களை கடந்து வந்திருக்கிறார். அவரிடம் ஒருமுறை ‘உங்களுக்கு நடந்ததிலேயே எதை மோசமான விபத்தாக நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘ஆர்மர் ஆப் காட்’ படத்தில் நடந்த விபத்துதான் என்றார். அடிக்கடி விபத்துகளில் சிக்குவதால் ஒரு கட்டத்தில் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதில் அவருக்கு பிரச்சினை வந்தது. ஐம்பது வயதில் கணுக்காலில் அடிபட்டு ஜாக்கிங் செல்லக்கூட முடியாமல் சிரமப்பட்ட ஜாக்கி, தனது உடற்பயிற்சி ஸ்டைலை மாற்றினாரே தவிர, ஒரு நாளும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததே இல்லை.

* ஜாக்கிக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் பாக்ஸிங்கும் ஒன்று. அதுவும் மற்றவர்களுக்கு பாக்ஸிங் சொல்லிக்கொடுப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். இளம்வயதில் உடற்பயிற்சியையே பிரதான வேலையாக கொண்டு இருந்த ஜாக்கி, தற்போது ‘உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தீவிரமான உடற்பயிற்சி மட்டும்தான் செய்யவேண்டும் என்ற தேவையில்லை. தற்காப்புக் கலைகளின் அடிப்படை விஷயங்கள், பாக்ஸிங்கின் அடிப்படை, இப்படி பிடித்த விஷயங்களையே நான் பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்கிறார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )