கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் திமுக எம்.பி. கனிமொழி

மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கனிமொழி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

முன்னதாக தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வந்த சமயத்தில், கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. வேட்பாளர்கள், கழக நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் கொரோனா உறுதியானது.

இந்த சூழலில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கும் கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்த நிலையில், கொரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்த கனிமொழி வாக்களித்து தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கனிமொழி குணமடைந்து விட்டார் என்றும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள கனிமொழிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.