கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தன்னார்வ அடிப்படையிலானது: சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது தன்னார்வ அடிப்படையிலானது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு கடிவாளம் போட உலக நாடுகள் தயாராகிவிட்டன. கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

மேலும், சில தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளன. சில வாரங்களில் இந்த தடுப்பூசிகளும் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து சில முக்கிய தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சகம் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) என்ற தலைப்பில் சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு: – கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது தன்னார்வ அடிப்படையிலானது. எனினும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறவும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும். பயனாளர்கள் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். பதிவு செய்யப்பட்ட பிறகே எந்த நேரத்தில் தடுப்பூசி போடப்படும் என்ற தகவல் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.