பண்டைய இந்தியா, உலகின் அறிவுத் தலைநகரமாக விளங்கியது : துணைவேந்தர்  நா. ராஜேந்திரன் பேச்சு.

பண்டைய இந்தியா, உலகின் அறிவுத் தலைநகரமாக விளங்கியது : துணைவேந்தர் நா. ராஜேந்திரன் பேச்சு.

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின், பண்டித தீனதயாள் உபாத்தியாயா இருக்கையின் சார்பில், தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் மறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் “பண்டித தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளை வெளிக்கொணர்தல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக லெ. சித. லெ. பழனியப்ப செட்டியார் அரங்கில் நடைபெற்றது.

இதன் துவக்க விழாவில், தலைமையுரையாற்றிய அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. ராஜேந்திரன்,“உலகின் சிறந்த 26 கலாச்சாரங்களில் இன்றைய அளவில் உயிர்ப்புடன் இருப்பது இந்திய மற்றும் சீன கலாச்சாரங்கள் மட்டுமே என்று ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டார். பண்டைய இந்தியா, உலகின் அறிவுத் தலைநகரமாக விளங்கியது. உலகின் பழமையான பல்கலைக்கழகங்களான நாளந்தா, தட்சசீலா மற்றும் காஞ்சிபுரம் என புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தோன்றி சிறப்பான கல்வியை அளித்து வந்தன. இதனுடன், பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளில் நமது இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த கோட்பாடுகளே சிறந்தவையாகவும் பல நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளுக்கு அடித்தளமாகவும் அமைந்தன.

காலனியாதிக்க விளைவுகளால் இந்திய கல்வி முறை மட்டுமல்லாது பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளில் ஐரோப்பியத் தாக்கம் அதிகமாகி பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானது. இதனால், நமது பழமையான மற்றும் பெருமைமிகு கல்வி முறை, பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளை மீட்டெட்டுக்கும் மிகப்பெரிய பொறுப்பில் இன்று நாம் உள்ளோம். இதை உணர்ந்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தற்போதுள்ள கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி, இந்திய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட புதிய வளர்ச்சி மேம்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றன. இம்மாதிரியான இந்தியப் பாரம்பரியத்தினை மையமாக கொண்ட வளர்ச்சி மாதிரிகளை அடிப்படையாக கொண்டது பண்டித தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் உருவாக்கிய ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடுகள் ஆகும். அவர், தற்சார்பு பொருளாதாரத்தில் மேம்பட்ட, முன்னேறிய கிராமங்களை கொண்ட, அதிகாரப் பகிர்வுடன் கூடிய இந்தியாவை கனவு கண்டார். தீனதயாள் உபாத்யாயா ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்தநாட்டின் தனி மனிதனின் மேம்பட்ட வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்தியவர். ஆகையால், இப் பெரும் தலைவரின் சித்தாந்தங்கள் தற்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது” என்று கூறினார்.

இத்தேசியக் கருத்தரங்கினை, புதுடெல்லி – டாக்டர்.சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், முனைவர் அனிர்பன் கங்குலி துவக்கி வைத்தார். அவர் தமது உரையில், “நமது இந்தியப் பாரம்பரிய மற்றும் கலாச்சாரக்கூறுகள், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்புத்தன்மையினை உறுதி செய்யும் காரணிகளாக விளங்குகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் இந்தியர்கள் மேம்பட்ட கலாச்சார மற்றும் அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றி வந்ததை உத்திரமேரூர் மற்றும் பல இடங்களில் கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு அறிய முடிகிறது.

மேற்கத்திய பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளை பின்பற்றிய பல்வேறு நாடுகள் தமது நிலைப்புத்தன்மையினை இழந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. ஆகவே, மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றுவதிலிருந்து விலகி, பண்டித தீனதயாள் உபாத்தியாயா உருவாக்கிய இந்திய கலாச்சாரம் சார்ந்த பொருளாதார மற்றும் அரசியல் கோட்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் நிலையான பொருளாதார மற்றும் வாழ்வியல் மேம்பாட்டினை அடையலாம் என்றார். தற்போதைய இளைஞர் சமுதாயம், பண்டித தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை தெளிவாக புரிந்து கொண்டு அவற்றை பின்பற்றி நடந்தால், வளமான மற்றும் வலிமையான பாரதத்தை கட்டமைக்க முடியும்” என்று கூறினார்.

காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் புதுடெல்லி பி.ஜி.டி.ஏ.வி கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் முனைவர் அஸ்வினி மகாஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அழகப்பா பல்கலைக்கழகத்தின், பண்டித தீனதயாள் உபாத்தியாயா இருக்கையின், இருக்கைப் பேராசிரியர் முனைவர் பூ. தர்மலிங்கம் வரவேற்றார், அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன உதவிப்பேராசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இந்நிகழ்வின் ஒருபகுதியாக, பண்டித தீனதயாள் உபாத்தியாயா இருக்கையின் சார்பாக, அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36 பேராசிரியர்கள் கொண்ட தீனதயாள் உபாத்யாயா பயிற்சி வட்டம் மற்றும் 50 மாணவர்களைக் கொண்ட தீனதயாள் உபாத்யாய இளைஞர் குழு ஆகியன துவக்கி வைக்கப்பட்டது. முன்னதாக இந்நிகழ்வில், துணைவேந்தர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பண்டித தீனதயாள் உபாத்தியாயா புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். அழகப்பா பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலைக்கல்லூரி, திருப்பத்தூர், சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி, தேவகோட்டை, சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கலைக்கல்லூரி, பள்ளத்தூர் ஆகிய இணைவுக்கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த ஒருநாள் தேசிய கருத்தரங்கில் புதுடெல்லி – டாக்டர்.சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், முனைவர் அனிர்பன் கங்குலி வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த மனிதநேய தத்துவம் என்ற தலைப்பிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை பேராசிரியர் முனைவர் பி.சக்திவேல், பண்டித தீனதயாள் உபாத்தியாயாவின் அரசியல் கோட்பாடுகள் என்ற தலைப்பிலும், புதுடெல்லி பி.ஜி.டி.ஏ.வி கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் முனைவர் அஸ்வினி மகாஜன் தற்காலப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவத்தின் தீர்வுகள் என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை முன்னாள் துறைத்தலைவர் முனைவர் எஸ்.அய்யம்பிள்ளை பொருளாதார கொள்கை வடிவமைத்தலில் பண்டித தீனதயாள் உபத்யாயாவின் பார்வைகளின் பங்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )