இந்திய ஆடைகள் உற்பத்தி துறையானது உலகில் இரண்டாவது பெரிய ஏற்றுமதி துறையாக உள்ளது : துணைவேந்தர நா.இராஜேந்திரன் பேச்சு.

இந்திய ஆடைகள் உற்பத்தி துறையானது உலகில் இரண்டாவது பெரிய ஏற்றுமதி துறையாக உள்ளது : துணைவேந்தர நா.இராஜேந்திரன் பேச்சு.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ரூசா 2.0 திட்டத்தின் கீழ் “ஆடைகள் உற்பத்தி தொழில் துறைக்குத் தேவையான திறன்பயிற்சி செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கின் துவக்க விழா அழகப்பா பல்கலைக்கழக லெ. சித. லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு அரங்கில் நடைபெற்றது.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கினை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர நா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். அவர் தமது உரையில், “ஆடை உற்பத்தி துறையானது, இந்திய பொருளாதாரத்தில் இயங்கி வரும் மிகவும் பழமையான தொழில்துறை ஆகும் என்றார். இந்திய ஆடைகள் உற்பத்தி துறையானது உலகில் இரண்டாவது பெரிய ஏற்றுமதி துறையாக உள்ளது. இந்திய ஆடை உற்பத்தி பொருட்களில் 70 விழுக்காடு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, மீதமுள்ள 30 சதவிகித ஏற்றுமதி ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இன்றைய அளவில் விவசாயத் துறைக்கு அடுத்து இந்த ஆடை உற்பத்தி தொழில் துறையே அதிக அளவில் வேலைவாய்ப்பினை அளித்து வரும் பெரிய துறையாக உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 62 மில்லியன் மக்களுக்கு இத்துறை வேலைவாய்ப்பினை தரக்கூடிய வகையில் வளர்ந்து வருகிறது. இந்த ஆடைகள் உற்பத்தி தொழிற்துறையானது தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிகளை அதிக அளவில் பயன்படுத்தும் துறையாக வளர்ந்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள், பணியாளர்களின் திறன் குறைபாடுகள், தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள பயிற்சி முறைகள் ஆகியன தற்பொழுதுள்ள பிரச்சனைகளாகும்.

அதிக அளவில் பணியாளர்களைக் கொண்டுள்ள ஆடைகள் உற்பத்தி துறையில் ஏற்படும் இந்தத் திறன் குறைபாடுகள் உலகளாவிய போட்டிகளில் இந்தியாவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். இத் துறையானது உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரும் பங்கினை வகித்து வருவதால், பணியாளர்களின் திறன் குறைபாடு இந்த துறையின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக் கூடியதாகும் என்றார். காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தால், நம் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கமுடியாத நிலை இருந்தது. இந்தக் குறைபாடுகளை களையும் வகையில் மாற்றங்களை உருவாக்குவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இதை மனதில் கொண்டே மத்திய மாநில அரசுகள் இந்த துறைக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. அழகப்பா பல்கலைக்கழகமும் ஆடைகள் உற்பத்தி தொழிற்துறையில், தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூசா2.0 திட்டத்தின்கீழ் நிதிஉதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்து நிறைய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது” என்றார்.

ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் விக்ரமசிங்கே தொடக்கவுரையாற்றினார். சீனாவின் சூசோவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முருகேஷ் பாபு முக்கியவுரையாற்றினார். திருப்பூர் நிப்ட் நிறுவன அப்பரால் தொழில்முனைவு நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பெரியசாமி சிறப்புரையாற்றினார்.

அழகப்பா பல்கலைக்கழக அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பூ.தர்மலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். உதவிப் பேராசிரியை முனைவர் க. மகேஷ் கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )