பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 12,075 பேருக்கு வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 12,075 பேருக்கு வாய்ப்பு!

பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் பாங்க்…. போன்ற அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளை பொதுத் துறை வங்கிகள் என்கிறோம். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ‘கிரிண்ட்லேய்ஸ்’ வங்கி போன்றவை அயல் நாட்டு முதலீடுகளுடன் செயல்படும் வங்கிகள் என்பது நமக்குத் தெரியும். இவை அல்லாமல், இந்திய தனியார் வங்கிகளும் உண்டு.

மூன்றாவதாக ஒரு பிரிவு இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள். மாநில, மாவட்ட அளவில் செயல்படும் இவை, மக்கள் மத்தியில் பிரபலமானவை ஆகவும், சிறந்த சேவை ஆற்றுபவை ஆகவும் உள்ளன. அனைத்து வகை வங்கிகளிலுமே ஆண்டுதோறும் ஏராளமானோர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு வருகின்றனர்.

பொதுத் துறை வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக “இன்ஸ்டிடியூட் ஆஃப் பாங்கிங் பெர்சனல் செலக் ஷன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

தற்போது கிளார்க் பணிகளுக்கான 9-வது எழுத்துத் தேர்வை (சி.டபுள்யூ.இ.-9) ஐ.பீ.பி.எஸ். அறிவித்துள்ளது. மொத்தம் 12 ஆயிரத்து 75 பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1379 இடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்…

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனும் அவசியம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.9.2019-ம் தேதியில் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பிப்பவர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்தத் தேர்வை அனுமதிக்கும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐ.பீ.பி.எஸ். அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படை வீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களைப் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )