ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் :அமெரிக்கா

ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் :அமெரிக்கா

ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா உறுதிபட தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்த உறுப்பினர்களான அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தம்தான் அது.

இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை ஈரான் மீறினால், அந்த நாட்டின் மீது ஐ.நா. தடையை மீண்டும் அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் ‘மீள் தடை’ என்றழைக்கப்படுகிறது.

இதனிடையே அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி வந்த டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது தீரா பகையாக உருவாகியுள்ளது. இதனிடையே கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. விதித்த ஆயுத தடை அடுத்த மாதம் காலாவதியாகிறது.

இந்த தடையை காலவரையின்றி நீட்டிக்க வலியுறுத்தி அமெரிக்கா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில் டொமினிக்கன் குடியரசு நாடு மட்டுமே அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இது அமெரிக்காவுக்கான மிகப்பெரிய தோல்வியாகவும், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்தது. இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தின் மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதிக்க தீவிரம் காட்டி வருகிறது.

எனினும் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், சட்டரீதியில் தாங்கள் அந்த ஒப்பந்தத்தில் நீடிப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. சபை பொது கூட்டத்தில் ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் நாளை (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய பயங்கரவாத ஆதரவாளராக ஈரான் உள்ளது. எனவே அந்த நாடு போர் ஆயுதங்களை வர்த்தகம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நாங்கள் நம்பவில்லை. எனவேதான் ஈரான் மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என்கிறோம். அந்த தடைகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய நாங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் நாங்கள் செய்வோம். மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )