அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது

அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது

அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘எப் 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு. அதாவது மாணவர்களின் கல்வி விசா காலம் முடிந்த பின்னரும் அவர்கள் அங்கு சட்டபூர்வமாக தங்கியிருக்கலாம்.

இந்த வசதியை பலர் முறைகேடாக பயன்படுத்தி அமெரிக்க அரசை ஏமாற்றி வருவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐ.சி.இ) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், போலி பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி விசாக்களை பெற்று அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்க முயற்சி செய்யும் நபர்களை கண்டறிவதற்காக அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையே ஒரு போலியான பல்கலைக்கழகத்தை உருவாக்கி வைத்துள்ளது.

மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் பார்மிங்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் போலி பல்கலைக்கழகத்தை ஐ.சி.இ. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கியது. இதனை அறியாத வெளிநாட்டு மாணவர்கள் பலர் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர்.

இதையடுத்து விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்தியர்கள் உள்பட 161 பேர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பார்மிங்டன் பல்கலைக்கழகம் விவகாரத்தில் மேலும் 90 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஆகும். இதுகுறித்து அமெரிக்க குடியேற்றம் மற்றும் அமலாக்கத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

பார்மிங்டன் போலி பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டவர்களின் ஆவணங்களை பேப்பர் சேசிங் ஆபரேஷன் திட்டப்படி அமலாக்கத்துறை சரிபார்த்தது. இதன் மூலம் இவர்கள் மாணவர்கள் அல்ல, மாணவர்கள் என்ற பெயரில் கல்வி விசா எடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் 90 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கையின் மூலம் இதுவரை 251 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு, அவர்களாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கு இறுதி உத்தரவு வழங்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்ல அப்பாவிகள் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மாணவர்கள் போலி பல்கலைக்கழகம் என தெரியாமலேயே சேர்ந்ததாகவும், ஐ.சி.இ. திட்டமிட்டே அப்பாவி மாணவர்களை வலையில் சிக்க வைத்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யும், அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் ஒருவருமான எலிசபெத் வாரன் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை கொடூரமானது என்று விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் டுவிட்டரில், “இது கொடூரமானது மற்றும் திகிலூட்டும் செயல். இந்த மாணவர்கள் அமெரிக்கா வழங்கக்கூடிய உயர்தர உயர் கல்வியைப் பெற வேண்டும் என்று கனவு கண்டார்கள். ஐ.சி.இ அவர்களை நாடு கடத்த, அவர்களை ஏமாற்றி, சிக்க வைத்தது” என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )