மாராட்டியத்தில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு கவர்னர் அழைப்பு

மாராட்டியத்தில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு கவர்னர் அழைப்பு

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மற்றொரு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றியது. பிற கட்சிகள் 16 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர்.

ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், அதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. இதனை ஏற்க பாரதீய ஜனதா விடாப்பிடியாக மறுத்து விட்டது.

இதற்கு மத்தியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார். பின்னர் சரத்பவார் சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து நடந்த திருப்பமாக, தங்களது ஆதரவு வேண்டுமானால் பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முதலில் சிவசேனா வெளியேற வேண்டும். சிவசேனாவை சேர்ந்த மத்திய மந்திரி அரவிந்த் சாவந்த் பதவி விலக வேண்டும் என்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இது சிவசேனாவுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

இதனால் ஆட்சியமைக்க பாரதீய ஜனதாவுடன் சிவசேனா கைகோர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் தங்களது நிலைப்பாட்டில் இறுதிவரை பிடிவாதமாக இருந்து விட்டன. இரு கட்சிகளும் ஒரு தடவை கூட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.

நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை கவர்னர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் புதிய திருப்பமாக மராட்டியத்தில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.

மொத்தம் 288 இடங்களில் பாஜக 108 இடங்களை கைப்பற்றி உள்ளதால் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சட்டசபையில் நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் பாஜக – சிவசேனா இடையே இழுபறி நீடிக்கும் நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )