மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை போராட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,

மத்திய அரசையும், அதன் தவறான கொள்கைகளையும் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை போராட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய மோடி அரசின் ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு’ என்ற தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்மறையான தாக்கம், தற்போதைய பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வங்கி செயல்பாடுகள் முடக்கம், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை இழப்பு மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவைகளை கண்டித்து காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.

இந்த பிரச்சினைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் நாடு சந்தித்துவரும் கவலை மற்றும் வேதனைகளை காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்கள் மத்தியில் எழுப்புவார்கள்.

நவம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து மாநில தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறும். இறுதியாக நவம்பர் இறுதி வாரத்தில் டெல்லியில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். மாநில அளவிலான போராட்டங்களில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் மூத்த பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்துகொள்வார்கள். கட்சியின் தேசிய தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பார்கள். நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று தங்கள் குரலை இந்த மோசமான மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த போராட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து 2-ந் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளின் முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் போராட்டங்களை மேற்பார்வையிட காங்கிரஸ் ஏற்கனவே 31 மூத்த தலைவர்களை நியமித்துவிட்டது.

நாடு முழுவதும் உள்ள 35 முக்கிய நகரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்திய அரசின் குறைபாடுகளை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி மூலம் விளக்குவார்கள் என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )