டெல்லி சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 40 பேர் அடங்கிய காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை கடந்த 18ந்தேதி வெளியிட்டது. இதன்படி, முன்னாள் மத்திய மந்திரி கிருஷ்ணா தீரத், பட்டேல் நகரில் இருந்தும், முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்தர் லவ்லி காந்தி நகரில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் உறுப்பினரான ஆல்கா லம்பா, சாந்தினி சவுக் பகுதியில் போட்டியிடுகிறார். இதேபோன்று தேர்தல் பிரசார குழு தலைவர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஆசாத் சங்கம் விஹார் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

இதனை அடுத்து 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதில், கெஜ்ரிவாலுக்கு எதிராக ரொமேஷ் சபர்வால் என்பவரை புதுடெல்லி தொகுதியில் நிறுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு முன்னாள் தலைவர் ராக்கி துசீட், ராஜீந்தர் நகர் தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அம்ரீஷ் கவுதம் மற்றும் பீஷம் சர்மா ஆகியோரை முறையே கொண்ட்லி மற்றும் கோண்டா தொகுதிகளில் நிறுத்தியுள்ளது.

இதனிடையே, டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 5 வேட்பாளர்கள் அடங்கிய மற்றொரு பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதன்படி, மடிப்பூர் தொகுதியில் (தனி) ஜெய் பிரகாஷ் பன்வார், விகாஸ்புரி தொகுதியில் முகேஷ் சர்மா, பிஜ்வாசன் தொகுதியில் பர்வீன் ராணா, மெஹ்ராலி தொகுதியில் மொஹிந்தர் சவுத்ரி, ஓக்லா தொகுதியில் பர்வேஸ் ஹாஷ்மி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று டெல்லி சட்டசபை தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. அக்கட்சியின் பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், நவ்ஜோத் சிங் சித்து, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் இடம் பிடித்து உள்ளனர். அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )