cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
இந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை :தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் - Dhinasakthi

இந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை :தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை,

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் (முதலாவது டெஸ்ட் பிப்.5-9 மற்றும் 2-வது டெஸ்ட் பிப்.13-17), கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மோதரா ஸ்டேடியத்திலும் (பிப்.24-28, மார்ச்.4-8) நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 27-ந்தேதிக்குள் இரு அணி வீரர்களும் சென்னை வர உள்ளனர். உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு பிறகு வீரா்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா தடுப்பு நடைமுறைகள் முடிந்ததும் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரான இந்த டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்க்க வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. வெளிஅரங்கில் நடக்கும் போட்டிகளில் 50 சதவீதம் வரை ரசிகர்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நடக்கும் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் இவ்விரு போட்டிகளும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் நடைபெறும்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உட்பட்ட கிளப் உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், மாநில கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர், நடுவர்கள், பொதுமக்கள் என்று யாருக்கும் டிக்கெட் வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தங்களது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கை வசதி கொண்ட ஆமதாபாத்தில் கணிசமான எண்ணிக்கையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது மத்திய மற்றும் மாநில அரசின் முடிவை பொறுத்தது. 50 சதவீதம் அளவுக்கு இல்லாவிட்டாலும் 20-30 சதவீத ரசிகர்களுக்காவது அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.