இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஜெனீவா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 1 லட்சத்து 3 ஆயிரத்தை எட்டியது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தற்போது 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இதற்கிடையே, ஏப்ரல் 15- ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வீடியோ ஒன்று பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால், மக்கள் மத்தியில் அதிர்வலைகள் எழுந்த நிலையில், அத்தகைய செய்திகளுடன் பரவிய வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது