ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தகம் – முதலீட்டை அதிகரிக்கும் ஆர்.சி.இ.பி

ஆர்.சி.இ.பி என்றழைக்கப்படும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாளியுறவு
பற்றிய உடன்படிக்கை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை
எளிதாக்கவும், தொற்றுநோய் பரவலுக்குப் பின் பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும்,
பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் என்று
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய இந்த வர்த்தக உடன்படிக்கை ஜனவரியில் அமலுக்கு வர
உள்ளது. இது உலக மக்கள்தொகை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் சுமார் 30
சதவீதத்தை உள்ளடக்கிய வர்த்தகக் குழுவை உருவாக்கும் சுமார் 90 சதவீத பொருட்கள்
மீதான வரிகளை விலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வர்த்தக
உடன்படிக்கை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக
சீர்குலைந்துள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டை மீட்டெடுக்கும் என்று பெய்ஜிங்
வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுத் துறையின் இணைப்
பேராசிரியரான சாங் கிங்ரன் கூறினார்.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாளியுறவு நாடுகள் இந்த வர்த்தக
உடன்படிக்கையின் மூலம் பெரிதும் பயனடைவதோடு, அவற்றின் உற்பத்தி மற்றும்
சந்தைகளையும் பல்வகைப்படுத்தவும் முடியும், இது அனைத்து பிராந்திய விரிவான
பொருளாதார கூட்டாளியுறவு நாடுகளுக்கும் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உந்து
சக்தியாக இருக்கும் என்று சாங் கூறினார்.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாளியுறவு பிராந்தியத்தில் உள்ள நாடுகளை
ஒன்றிணைக்கவும், தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை சரி
செய்யவும் இது உதவும் என்று அவர் கூறினார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும்
உலகெங்கிலும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சிக்கு இக்கூட்டமைப்பு
கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று சமீபத்திய ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு
தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில் 2030 ஆம் ஆண்டிற்குள் இவ்வுடன்படிக்கையின்
உறுப்பு நாடுகளின் வருமானம் 0.6 சதவிகிதம் அதிகரிக்கும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. 2.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை
உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் மிகவும் ஆற்றல்மிக்க பொருளாதார வளர்ச்சியை
கொண்டிருந்த போதிலும் அது உயர் மட்ட ஒருங்கிணைப்பைக்
கொண்டிருக்கவில்லை. எனவே இக்கூட்டமைப்பானது பிராந்திய பொருளாதார
ஒருங்கிணைப்பை பெரிதும் மேம்படுத்தும் மற்றும் நாடுகளிடையே சமூக மற்றும் கலாச்சார
பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் நேஷனல்
இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்ட்ராடஜியின் இணை ஆராய்ச்சியாளர் ஜியா
டுகியாங் கூறினார்.
15 ஆசிய-பசிபிக் நாடுகள் – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் 10 உறுப்பு
நாடுகள் மற்றும் அந்நாடுகளின் ஐந்து பெரிய வர்த்தக கூட்டாளிகளான சீனா,
ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை இணைந்து
கடந்த ஆண்டு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாளியுறவு
உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

இது சந்தேகத்திற்கு இடமின்றி உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும்
ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மீட்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கும்.
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை உலகமயமாக்கல் மற்றும்
பன்முகத்தன்மைக்கு பங்களிக்கும் என்று சாங் கூறினார்.

சீனா-ஜப்பான்-தென்கொரியா தடையற்ற வர்த்தக மண்டலம் பற்றிய
பேச்சுவார்த்தைகளுக்கு இது ஒரு நல்ல அடித்தளமாக அமையும் என்று லியோனிங்
சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மெங் யூமிங் கூறினார்.
கடந்த காலங்களில் இந்த மூன்று நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில்
அதிக திருப்பங்கள் காணப்பட்ட போதிலும் பிராந்திய விரிவான பொருளாதார
கூட்டாளியுறவு உடன்படிக்கையின் கீழ் பிராந்திய ஒருங்கிணைப்புக்கான பாதை
மென்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மெங் கூறினார்.

– திருமலை சோமு