அ.தி.மு.க.வின் நல்லாட்சி தொடர வேண்டும் :டாக்டர் ராமதாஸ்

அ.தி.மு.க.வின் நல்லாட்சி தொடர வேண்டும் என்று வாக்களித்தபின் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நல்லாட்சி தொடர…
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மனைவி சரஸ்வதியுடன் நேற்று காலை 8.30 மணிக்கு திண்டிவனம் மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் நல்லாட்சி தொடர வேண்டும். இதைத்தான் மக்களும் நினைக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் மக்கள் நிம்மதியாகவும், பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தார்கள்.உழவர்கள் பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்பட வேண்டும். தமிழகத்தில் கல்விக்கும், உயர் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கான செலவு முழுவதையும் அரசு ஏற்கும் நிலை உருவாக வேண்டும்.மேலும் விவசாய இடுபொருட்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்க வேண்டும். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. தேர்தல் குறித்த கருத்து கணிப்புக்கு மக்கள் முக்கியத்துவம் தருவதில்லை. ஏனென்றால் இது கருத்து திணிப்பாக இருக்கிறது.

தரம் தாழ்ந்து பேசக்கூடாது
தேர்தல் பிரசாரத்தில் தரம் தாழ்ந்து பேசக்கூடாது. கொள்கை அடிப்படையில் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விமர்சனம் செய்யலாம். அது கூட நயமாகவும், நளினமாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது.ஓ.பி.ராமசாமி ரெட்டியார், காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை வரையில் விமர்சனங்களை நாகரீகமாக பேசினார்கள்.

இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அரசியல் கட்சிகள் விமர்சனங்களை தரமாக செய்யும்படி வகுத்துக்கொள்ள வேண்டும். தனிநபர் மற்றும் குடும்பத்தினர், பெண்கள், தாய்மார்களை இழிவுப்படுத்தி பேசுவது இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந்தற்று என்ற திருவள்ளுவரின் வார்த்தைக்கு ஒப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

இதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது மனைவி சவுமியா அன்புமணி, மகள் மற்றும் குடும்பத்துடன் திண்டிவனம் மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளிக்கு சென்று வாக்களித்தார்.