• Home
  • தமிழகம்
  • அரசு ஆஸ்பத்திரிகளில் எச்.ஐ.வி. ரத்தம்: அமைச்சர் விஜயபாஸ்கரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகம்

அரசு ஆஸ்பத்திரிகளில் எச்.ஐ.வி. ரத்தம்: அமைச்சர் விஜயபாஸ்கரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசு ஆஸ்பத்திரிகளில் எச்.ஐ.வி. ரத்தம்: அமைச்சர் விஜயபாஸ்கரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசு ஆஸ்பத்திரிகளில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எச்.ஐ.வி. இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று கடந்த 1-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சபதம் எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்தில் கடந்த 3-ந் தேதியே ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதுவும் விருதுநகரில் உள்ள சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. உள்ள ரத்தத்தை செலுத்தி, அரசே அந்த இளம்பெண்ணை எச்.ஐ.வி நோய்க்கு உள்ளாக்கி இருப்பது அ.தி.மு.க. அரசு நிர்வாகத்தின் படு தோல்வியைக் காட்டுகிறது.

ரத்த தானம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்து அவரும் தற்போது உயிரிழந்திருப்பது தமிழக அரசின் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படும் ரத்தங்களின் பாதுகாப்பின் மீது மிகப்பெரிய கேள்வியையும் ஆழமான சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.

சாத்தூரில் நடைபெற்ற கொடூரமான, மனித நேயமற்ற சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற இதேபோன்ற, சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

அதை விட புகார் கொடுத்த பெண்ணின் வீட்டிற்கு கவுன்சிலிங் செய்யப் போகிறோம் என்ற தோரணையில் நள்ளிரவில் சென்று மிரட்டியது அநாகரீக நடவடிக்கையின் உச்சமாகவும், அரசு மனித உயிர்களுடன் விளையாடுவதில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி செயல்படுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 1-ந் தேதி நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்ததான நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்போம்’ என்றார். ஆனால் அவரும், அவருடைய ஆட்சியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் பொறுப்பற்ற நிர்வாகத்தால் விலை மதிப்பற்ற உயிர்களுக்கு ஆபத்தை உண்டாக்குவதில் மும்முரமாக செயல்பட்டது இப்போது சாத்தூரிலும், சென்னை மாங்காட்டிலும் வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.

99 சதவீத விழுக்காடு ரத்தம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வருகிறது. அந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவையை மதித்து, அந்த ரத்தங்களை எல்லாம் உரிய முறையில் சேமித்து வைத்து அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை-எளிய, நடுத்தர மக்களை காப்பாற்றிட அ.தி.மு.க. அரசு முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது என்பதற்கு இதுவே சாட்சி. இப்படியொரு மோசமான நிர்வாகத்திற்கு வித்திட்ட குட்கா புகழ் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும், 6 வருடத்திற்கும் மேலாக சுகாதாரத்துறை செயலாளராக இருந்தும் படு மோசமான நிர்வாகத் தோல்விக்கு காரணமாக இருக்கும் ராதாகிருஷ்ணன் உடனடியாக மாற்றப்பட்டு, திறமையான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை சுகாதாரத்துறைக்கு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Related posts

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி ரோட்ராக்ட் சார்பில் பிளைண்ட் போல்டடு கன்வர்சேசன் நிகழ்ச்சி

dhinasakthi news

தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 % குறைவு

dhinasakthi news

ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசம்

dhinasakthi news

Leave a Comment